November 28, 2021, 4:58 am
More

  கல்லிடை., கோயில் நடராஜர் சிலையை மீட்ட பொன்.மாணிக்கவேல்! : நெல்லைவாசிகள் நன்றி!

  ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது பொன்மாணிக்கவேல் குழு

  natarajar statue1 - 1

  நெல்லை அருகே 37 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை சிலைத்தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலானாய்வுக் குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதித்துள்ளனர்.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் சமேத அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில், பாண்டிய மன்னர்களின் காலத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட பழைமையான கோயில். இங்கே உத்ஸவ மூர்த்தியாக நடராஜர் விக்ரஹத்தை வைத்து பூஜைகள் செய்து வந்தார்கள்.

  கடந்த 1982 ஜூலை 6 ஆம் தேதி இந்தக் கோவிலின் இரும்புக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் ஆகிய தெய்வ வடிவங்களை கொள்ளை அடித்தனர் . இது குறித்து வழக்கு பதிவு செய்யப் பட்டது. 1984 வரை வழக்கு விசாரிக்கப் பட்டும், எந்த துப்பும் கிடைக்காமல், வழக்கைக் கைவிட்டது காவல்துறை.

  இந்நிலையில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டு வழக்கை மீண்டும் கையில் எடுத்தார்.

  natarajar statue - 2

  வரலாற்று நூல்கள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் அந்த கோவிலில் 1958ல் எடுக்கப்பட்ட புகைபடங்களைக் கொண்டு சிலைகளைக் கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர்.

  இதில் இந்தக் கோயிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சௌத் ஆஸ்திரேலியா அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இந்தச் சிலை இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட சிலை என்பதை தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி ஆய்வு செய்து உறுதிபடுத்தினார்.

  நாகசாமி அளித்த சான்றுக் கடிதத்தை ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துக்கு சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் அனுப்பி வைத்தார். மேலும் திருட்டுப் பொருளை 17 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் வைத்திருப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டி தங்களிடம் சிலையை ஒப்படைக்கக் கோரி கடிதம் எழுதினார்.

  இதையடுத்து சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆயினும் அதனை விமானம் மூலம் இந்தியாவுக்கு எடுத்து வர தமிழக அரசின் அனுமதிக்காக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் 300 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

  இந்நிலையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணை தூதர்கள் டாக்டர் காண்டேன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உதவியால் நடராஜர் சிலையை அருங்காட்சியகத்தின் நிர்வாகி ராபின்சன் தனது சொந்த செலவில் இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

  அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து தில்லிக்குக் கொண்டு வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான நடராஜர் சிலை, சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

  சென்னை வந்த அந்த விக்ரஹத்துக்கு, இன்று சிறப்பு பூஜைகள், ஆராதனை ஆகியவை நடைபெற்றன. சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், உயர் நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு இல்லையெனில் இந்த சிலை மீண்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்காது என்றும் மீதமுள்ள சிலைகளையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பூஜைக்காக குலசேகரமுடையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

  தனிப்படையை வழிநடத்திச் சென்று பாரம்பரியம் மிக்க நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வந்து, சாதித்துக் காட்டி இருக்கும் பொன்மாணிக்கவேல் மற்றும் சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு நெல்லை மாவட்ட மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,745FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-