
திருவண்ணாமலை மாவட்டம் சந்தபுதுப்பாளையம் பகுதியை சேர்ந்த எண்ணெய் வியாபாரி அருணாசலம் மகன் அருண்குமார் (வயது 19), இவர் சோமாசிபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளார். இவர்கள் இருவரும் திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடியில் 1 வருடத்திற்கு முன் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது சந்தித்து பழகி உள்ளனர். ஒருவருக்கொருவர் கைப்பேசி எண்ணை பகிர்ந்து கொண்டு செல்லில் பேசி காதலை வளர்த்துள்ளனர்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து போளூருக்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர்.

900 படிக்கட்டுகள் உள்ள போளூர் சுயம்பு லட்சுமி நரசிம்மசுவாமி மலை மீது ஏறினர். இந்த மலை சுமார் 300 அடி உயரம் கொண்டதாகும். நேற்று காலை மலையை விட்டு கீழே இறங்கி அல்லிநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தனர். அங்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலைமீது ஏறினர்.
மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போளூர் துணை சூப்பிரண்டு குணசேகரனின் குழுவினர் அவ்விடத்துக்கு வந்தனர்.
அவர்களில் சிலர் படிக்கட்டு வழியாகவும், சிலர் பாறைகள் வழியாகவும் மலையில் ஏறினர். காவலதுறையினர் தங்களை பிடிப்பதற்காக வருவதை பார்த்ததும் அருண்குமாரும், அவரது காதலியும் மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்தனர்.
அவர்கள் கீழே உள்ள பாறையில் விழுந்ததால் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயத்துடன் துடித்த இருவரையும் காவல்துறையினர் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் போளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.