
திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய திறனாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையுரையில் தேசியத் திறனாய்வுத் தேர்வு என்பது அதிக அறிவாற்றல் மற்றும் கல்வியில் திறமையுடைய மாணவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் தேசிய அளவில் நடத்தப்படும் ஒரு உதவித்தொகைத் திட்டமாகும்.
இது இந்தியாவில் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

8–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மத்திய அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகை 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை கிடைக்கும். மாதம் ரூ1000 வீதம் பனிரெண்டாம் வகுப்பு வரை ரூ48,000/- வழங்குவார்கள்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று பயன் பெறலாம். மாவட்டத்திற்கு தேர்வு பெறும்100 மாணவர்கள் பயனாளியாவர்கள்.
முன்பு இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகளவில் மாணவ–மாணவிகளிடம் இல்லாமல் இருந்தது. இப்போது வருடத்துக்கு வருடம் தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சிறப்புரையில் அரசு வழங்குகின்ற நலத்திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றார். பெற்றோர்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தி சிறந்த கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என பேசினார்.
கே .கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திலகம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜூலியட் ருபெல்லா பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக லூயிஸ் ராஜ் வரவேற்க மீனாகுமாரி நன்றி கூறினார்.
- யோகா விஜய்



