
தமிழகம் வருகை தரும் பாரதப் பிரதமர் மோடிக்கு வரவேற்பு தெரிவித்தும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்றும், கோரிக்கை மனு இது தொடர்பில் வழங்கப் படுவதாகவும் இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் வாயிலாக பாரதப் பிரதமர் மோடி மற்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அளித்துள்ள கோரிக்கை / புகார் மனுவில் கூறியிருப்பதாவது…
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு வணக்கம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
பொருள் : தமிழகம் வருகை தரும் பாரதப்பிரதமர் மோடிக்கு வரவேற்பு – சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு – 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – கோரிக்கை / புகார் மனு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.
பாரதப் பிரதமர் திருமிகு.நரேந்திரமோடி அவர்களும், சீன அதிபர் திருமிகு. ஜீ ஜின்பிங் அவர்களும் இருநாட்டு உறவுகள் மேம்படுவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடத்த தமிழகம் வருகின்றனர், மாமல்லபுரத்தில் இருவரும் சந்தித்து பேசுகின்ற நிகழ்வு தமிழகத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
இந்நிகழ்வில் இ.ம.க சார்பிலும் இந்து தமிழர்களின் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தும், சீனா சர்வாதிகார கம்யூனிச நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங்-கின் இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

பின்வரும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கின்றோம்:
- சீனப்பட்டாசுகள், சீன பொம்மைகள், சீனாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன்களால் தமிழகத்தில் சில்லறை வியாபாரிகளும், பட்டாசு உற்பத்தியாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப் படுகின்றனர், தமிழகத்தில் சிறுதொழில் நிறுவனங்கள், வணிகர்கள் மற்றும் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும்.
- இமயமலையில் சிவபெருமானின் உறைவிடம் திருக்கயிலாயமலை மற்றும் புனிதமான மானசரோவர் ஏரி உள்ளிட்ட இந்து தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை சீனா கைப்பற்றி அக்ரமித்து வைத்துள்ளது. இதனை மீட்க வேண்டும். திருக்கயிலாய மானசரோவர் புனிதயாத்திரை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு பாதுகாப்பும் வசதிகளும் செய்து தரவேண்டும்.

- இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களின் வாழ்விடங்களையும், பூர்வீக நிலங்களையும் ஆக்ரமிப்பதற்கு சீன அரசாங்கம் உதவி செய்து வருகிறது. இலங்கை அரசோடு கை கோர்த்து செயல்படும் சீன அரசாங்கம் இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் இந்து தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.
- திபெத் நாட்டை சீனா ஆக்ரமித்து திபெத் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. சீன அதிபர் வருகையின் போது திபெத்திய மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியரை முன் எச்சரிக்கை நடவடிக்கை எனும் பெயரில் தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். திபெத் மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும்.
- இந்தியாவிற்கு எதிரான சீனாவின் ஆபரேசன் முத்துமாலை சதித்திட்டம், அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவது, சிக்கிம்மில் டோக்லஹாம் ஆக்ரமிப்பு ஆகியவற்றை இந்தியா கண்டிக்க வேண்டும். காத்மீரின் ஒரு பகுதியான அக்சய்சீனை மீட்க வேண்டும். ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக வருவதை சீனா தொடர்ந்து எதிர்ப்பதை கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மூலமாக கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படும். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இ.ம.க சார்பில் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். தேசபக்தர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.



