ஜெயலலிதாவாக வேடம் கட்டிய கங்கனா ரணாவத்தின் பட வீடியோ ஃபர்ஸ்ட் லுக்காக வெளி வந்திருக்கிறது. இந்தப் படங்களையும் வீடியோவையும் அதற்குள் பலர் பகிர்ந்து கொண்டு, இது செட் ஆவுமா ஆவாதா என்று பட்டிமன்றமே நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வரும் சூப்பர் ஸ்டாரினியாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவை இந்தத் தலைமுறையில் பலரும் பார்த்திருப்பதால், ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்க்கும் என்ன வித்தியாசம் என்று அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து மேய்ந்து விடுகிறார்கள்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் மிகவும் அர்ப்பணிப்போடு ஒவ்வொரு படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு, ஜனவரியில் சுதந்திரப் போராட்ட வீராங்கணை ஜான்சி ராணி லட்சுமிபாயி வாழ்க்கை வரலாற்றுப் படம் மணிகர்ணிகா என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் இளம் வயதில் சினிமாவில் நடித்தபோது, துள்ளல் நடனத்துடன் எவ்வாறு ஜெயலலிதா நடித்தாரோ அது போன்ற நடனக் காட்சியுடனும், தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவாக மேடையில் தோன்றி ரெட்டை இலை விரலைக் காட்டி புன்னகைக்கும் காட்சி என இரு வேறு வித்தியாச காட்சிகளையும் கங்கனாவின் நடிப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.
கங்கனா ரணாவத் இந்தப் படத்துக்காக தமிழ் கற்றேன் என்றார். மேலும், பரதநாட்டியமும் கற்றாராம்.
ஜெயலலிதாவின் பல்வேறு படங்களைப் பார்த்து அவரது மேனரிஸத்தைப் பார்த்துக் கற்றுக் கொண்டு, அவரைப் போலவே தாமும் மாறுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
ஜெயலலிதாவாக மாறியுள்ள கங்கனா ரனாவத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி அந்தனர். தலைவி எப்போது எப்போது என்று கேட்டு வந்தனர்.
இந்த நிலையில், இப்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா வேடத்துக்கு கங்கனா செட் ஆவமாட்டார் என்று கூறினர் பலர். தற்போது இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, ரசிகர்கள்தான் அதைச் சொல்ல வேண்டும்.!
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இதோ…