
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக., அதிமுக., இரண்டும் போடும் நாடகத்தனங்கள் குறித்துதான் இப்போது தமிழக அரசியல் களம் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் தமிழக அரசு திட்டமிட்டு, புதிய மாவட்டங்களை அறிவித்து உருவாக்கி வருகிறது என்று ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்தது திமுக.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி, ஒவ்வொரு மேடையிலும் உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்ட படி நடக்கும் என்று உறுதி கூறி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் ஒவ்வொரு மேடையிலும் மீண்டும் மீண்டும் கூறுவதைப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக., ஏதோ மறைமுக செயல்திட்டம் வைத்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் இரு பிரதான கூட்டணிக் கட்சிகளிடமும் அதிருப்தி, வேண்டுகோள்கள், என்று அரசியல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலை புதிய மாவட்ட நிர்வாக வரையறையின் படி நடத்த வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கினைத் தொடுத்துள்ளது திமுக. ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தடைப் பட்டுப் போனதற்கும் திமுக.,வின் வழக்கே காரணம் என்று கூறப் படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
இதற்கு, தலைமை நீதிபதி அமர்வில் முறையிட திமுக தரப்புக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறு வரையறை பணிகளை நிறைவு செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்த திமுக., வின் மனுவை, அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை திமுக விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகியுள்ளது. யார் தடுத்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று மாநில அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் அரசியலில் வயது முதிர்ந்த குழந்தை ஸ்டாலின்! என்று புதிதாக ஒரு பட்டத்தையும் சூட்டியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
இதனிடையே, உள்ளாட்சி தேர்தலைத் தடுக்க மறைமுகமாக நடக்கும் முயற்சிகளை பொருட்படுத்தாமல் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள திமுக., இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் சொல்கிறோம்; தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
எப்படியோ, மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அரசியல் நகர்வுகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.



