கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்து இருப்பதால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியவற்றில் இருந்து… தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி மழை அளவு 920.09 மி.மீ ஆகும். 2014-ம் ஆண்டில் தமிழகத்திற்கு 906.09 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது சாதாரண மழை அளவை விட 2 சதவீதம் குறைவானதாகும். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான மழையும், 18 மாவட்டங்களில் போதுமான மழையும் 5 மாவட்டங்களில் அதிக மழையும் கிடைக்கப் பெற்றது. 2014-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையில் மாநிலத்திற்கு போதுமான மழை கிடைத்த போதிலும் வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, காஞ்சீபுரம், விருதுநகர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் குறைவான மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படும் குடிநீர் பற்றாக்குறையினை சமாளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை நிலையை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசால் அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் குடிநீர் தேவையினை ஆய்வு செய்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள துறை ரீதியான நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தெரிவித்துள்ளனர். குடிநீர் பற்றாகுறையை சமாளிப்பதற்காக துறை ரீதியான திட்ட ஒதுக்கீடு மற்றும் அவசர காலநிதியைத் தவிர்த்து கூடுதலாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் சில பணிகள் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக துறைத் தலைவர்கள் மற்றும் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், புனரமைப்புப் பணிகள், லாரிகள் மூலம் குடிநீர் வழங் கல், சின்டெக்ஸ் டாங்குகள் அமைத்தல், குடிநீர் குழாய் களை மாற்றுதல், சிறு மின்விசைப் பம்பு அமைத்தல், கைப்பம்புகள் அமைத்தல் ஆகியவையாகும். இந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி, திருவண்ணாமலை ரூ.10 கோடி, காஞ்சீபுரம், திருச்சி, விருதுநகர், மதுரைக்கு ரூ.5 கோடி, பெரம்பலூருக்கு ரூ.3 கோடி, அரியலூருக்கு ரூ.2 கோடி, மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கும் தலா ரூ.50 லட்சம், ஆக மொத்தம் ரூ.66.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசுத் துறைகளான, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகத் துறைக்கு தலா ரூ.10 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.3 கோடி, கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எதிர்வரும் கோடைகாலத்தில் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க ஏதுவாக அமையும். என்று பேசினார்.