To Read it in other Indian languages…

  சிவ மகிம்னா ஸ்தோத்திரம் தோன்றிய கதை!

  shiva pooja - Dhinasari Tamil

  நர்மதை நதிக்கு வட கரையில் ‘மந்தாதா’ என்ற இடத்தில் அமைந்துள்ள அமரேஸ்வரர் ஆலயத்தின் கல்வெட்டுகளில் ‘சிவ மகிம்ன: ஸ்தோத்ரம்’ காணக் கிடைக்கிறது. இக்கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

  சிவனைத் துதிக்கும் இனிமையான பாடல்களான சிவ மகிம்னா ஸ்தோத்ரம் சிகரிணி சந்தஸ்ஸில் இயற்றப்பட்டுள்ளது.

  மிகச் சிறந்த அத்வைத வாதியான ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி ஸ்வாமிகள் (1540-1640) சிவ மகிம்னா ஸ்தோத்திரத்தை முன்னுரையோடு எடுத்தெழுதி வெளியிட்டு சிவ பக்தர்களுக்கு பெருந்தொண்டு புரிந்துள்ளார். அதன் முன்னுரையில் இத்தோத்திரம் உருவான சுவையான கதையையும் பாடலைப் பாடிய புஷ்பதந்தர் பற்றியும் விவரித்துள்ளார்.

  மதுசூதன சரஸ்வதி ஸ்வாமிகள்:-

  ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி ஸ்வாமிகள் வங்காளத்தைச் சேர்ந்தவர். காசியில் வாழ்ந்தவர். அக்பர் சக்ரவர்த்தியின் போற்றுதலுக்கு உரியவராகவும் துளசீ தாசரின் நண்பராகவும் விளங்கினார். இவர் அத்வைத சித்தி என்ற மிகப் புகழ் பெற்ற நூலை இயற்றியுள்ளார். துவைத – அத்வைத வாதங்களில் மிகச் சிறப்பாக வாதிட்டு அத்வைதத்தை நிலை நாட்டிய சூரர்.

  புஷ்பதந்தர்:-

  சிவ மகிம்னா ஸ்தோத்திரம் பாடிய புஷ்பதந்தர், கந்தர்வ உலகைச் சேர்ந்தவர். இந்திரனின் சபையில் இசைக் கலைஞராக விளங்கியவர். பிரமத கணங்களின் குணம் பொருந்தியவர். புஷ்பதந்தர் என்றால் மலர்களைப் போன்ற அழகிய பல் வரிசை கொண்டவர் என்று பொருள். புஷ்பதந்தர் சிறந்த சிவ பக்தர். அழகிய மலர்களைக் கண்டால் மகிழ்ந்து அவற்றை சிவனுக்கு அர்ப்பணிக்க விழைபவர். கைலாயத்தில் சிவன் பார்வதி நந்தி மற்றும் பரிவாரங்களோடு அமர்ந்திருக்கையில் புஷ்பதந்தர் கையில் புஷ்பங்களுடன் சிவனருகில் நின்று ஓம் நமசிவாய! என்று சொல்லி அரச்சனை செய்து மகிழ்வார்.

  கந்தர்வர், கின்னரர், யக்ஷர், அப்ஸரஸ் போன்ற மேலுலக வாசிகள் கடவுளை அருகில் சென்று வணங்கும் ஆசி பெற்றவர்கள். மனிதனை விட மிகவும் உயர்ந்தவர்கள். தெய்வீக சக்தி பொருந்தியவர்கள்.

  அரண்மனைத் தோட்டம்:-

  புஷ்பதந்தர் ஒரு முறை ஆகாய மார்க்கமாக பயணிக்கையில் பூலோகத்தில் அரசன் சித்திர ரதனுடைய அரண்மனைத் தோட்டத்தைக் காண நேர்ந்தது. “அகா! எத்தனை அழகிய மலர்கள்! சிவபூஜைக்கு ஏற்ற புஷ்பங்கள்!!’ என்று வியந்து மிக அழகிய பூந்தோட்டமான அதில் புஷ்பதந்தர் மனதைப் பறி கொடுத்தார்.

  அரசன் சித்திர ரதனும் சிறந்த சிவ பக்தன். பூந்தோட்டம் அமைத்து அதில் மலரும் புஷ்பங்களைக் கொண்டு சிவனுக்கு தினமும் அர்ச்சனை செய்து வந்தான்.

  புஷ்பதந்தர் பூக்களைத் திருடுதல்:-

  அரசனுடைய நந்தவனத்து மலர்களின் அழகில் மெய்மறந்து போன புஷ்பதந்தர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அப்பூக்களைப் பறித்து விட்டார். பிறர் பொருளை அவரறியாமல் அபகரிக்கும் குற்ற உணர்வு இருந்தும் சிவ பெருமானுக்கு அழகிய மலர்களைச் சமர்ப்பிக்கும் ஆர்வத்தால் அச்செயலைச் செய்தார்.

  அதன் விளைவாக அரசனது தோட்டத்தில் பூக்கள் காணாமல் போயின. அரசனுடைய சிவ பூஜைக்கு பூக்கள் குறைந்தன. தோட்டக்காரன் அரசனிடம் புகார் கூறினான். அரசன் காவலை பலப்படுத்தினான்.

  எத்தனை காவலர்கள் இருந்தும் அவர்கள் கண்ணுக்குத் தென்படாமல் தெய்வீக சக்தி கொண்ட புஷ்பதந்தர் இருள் விலகுமுன் வந்து பூக்களைக் கொய்து சென்றார். புஷ்பதந்தர் பூக்களைக் களவாடும் செயல் தினமும் தொடர்ந்தது.

  தெய்வ வழிபாட்டிற்கென்றே தான் வளர்த்து வரும் பூந்தோட்டத்தில் மாயத் திருடன் யாரோ நுழைந்து பூக்கொய்து செல்வதை அறிந்த அரசன் ஒரு உபாயம் செய்தான். சிவனின் நிர்மால்யமான வில்வ இலைகளை தோட்டத்தில் தூவச் செய்தான்.

  “தோட்டக்காரரே! இவை சிவனைப் பூஜித்த வில்வ இலைகள். இவற்றைத் தோட்டத்தில் தூவுங்கள். நீங்கள் யாரும் இதை மிதித்து விடாதீர்கள். இவை மிகவும் புனிதம் வாய்ந்தவை..!” என்று எச்சரித்தான்.

  புஷ்பதந்தர் இதை அறியாமல் வில்வ இலைகளின் மேல் கால் வைத்து மிதித்ததால் சிவனின் கோபத்திற்கு ஆளாகி தன் தெய்வீக சக்திகளை இழந்தார். சிறந்த சிவ பக்தரானதால் நடந்ததை அறிந்து கொண்டார்.

  “ஆ..! அபசாரம் செய்து விட்டேன். என் இயல்பான தெய்வீக சக்திகளை இழந்து விட்டேன். இனி எவ்வாறு கந்தர்வ உலகம் திரும்பிச் செல்வேன்? என் தெய்வமான பரமேஸ்வரனைக் கண்டு வணங்குவது எங்ஙனம்?” என்று கலங்கினார்.

  maha shivaratri wishes 3 - Dhinasari Tamil

  சிவமகிம்னா ஸ்தோத்திர தோற்றம்:-

  தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டி இறைவனை நெக்குருகப் பிரார்த்தித்தார். வெகு தூரம் விலகிச் சென்று ஒரு நதிக்கரையில் அமர்ந்து சிவனை தியானித்தார். அப்போது அவர் பாடிய துதிப் பாடலே சிவ மகிம்ன: ஸ்தோத்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இறைவன் அவர் பாடலில் மகிழ்ந்து புஷ்பதந்தரை மன்னித்து அவருடைய தெய்வீக சக்திகளைத் திரும்ப அளித்தார்.

  சிவமகிம்னா ஸ்தோத்ரம் இவ்வாறு தொடங்குகிறது:
  “மஹிம்ன: பாரம் தே பரம விதுஷோ யத்ய சத்ருசீ
  ஸ்துதிர் ப்ரஹ்மா தீனாமபி தத் வசன்னா ஸ்த்வ யிகிர:!
  அதா வாஸ்ய: சர்வ: ஸ்வ மதி பரிணாமாவதி க்ருணன்
  மமா ப்யேஷ ஸ்தோத்ரே ஹர நிர பவாத: பரிகர”!!

  இதன் பொருள்:- ‘பிரம்மாவும் மற்ற கடவுளர்களும் கூட உன் மகிமையைப் போற்றும் விதம் அறிந்திலரே! வினைகளைத் தீர்ப்பவனே! அனைத்தும் அறிந்த அறிஞர்களும் உன் பெருமையின் ஆழத்தைக் கண்டிலரே! ஆதலால் என்னைப் போன்ற அறிவீனன் உன்னைப் போற்ற முற்படுகையில் நீ அருளல் வேண்டும். நீயே அனைத்துமாய் எண்ணியுள்ளேன்!”

  இனிமையானதும் சிறந்ததுமான இத்தோத்திரம் சிவனின் மகிமைகளை அழகாக விளக்குகிறது.

  மிகப் புகழ் பெற்றதும் அனைவராலும் எடுத்துக் கையாளப்படுவதுமான ஒரு ஸ்லோகம் புஷ்பதந்தர் பாடிய சிவ மகிம்னா ஸ்தோத்திரத்தின் 32வது பாடலாகும். அப்பாடல் வருமாறு:-

  “அஸிதி கிரி சமம் ஸ்யாத் கஜ்ஜலம் சிந்து பாத்ரே
  சுரதரு வர சாகா லேகினீ பத்ர முர்வீ!
  லிகதி யதி க்ருஹீத்வா சாரதா சர்வ காலம்
  ததபி தவ குணானா மீச பாரம் ந யாதி”!!

  இதன் பொருள்:-
  “நீல மலையையே எழுதும் மையாக்கி, சமுத்திரத்தையே மைக் குப்பியாக்கி, கற்பக விருட்சத்தின் கிளையையே எழுது கோலாக்கி, விரிந்து பரந்த பூமியையே எழுது பலகையாக்கி, அறிவு தெய்வமான சரஸ்வதியே பல காலம் எழுதினாலும் உன் மகிமையை முழுவதும் விளக்க இயலாது”.

  மேலும்,
  “ஸ்ரீ புஷ்பதந்த முக பங்கஜ நிர்கதேன
  ஸ்தோத்ரேண கில்பிஷ ஹரேண ஹரப் ப்ரியேண!
  கண்டஸ் திதேன படிதேன சமாஹிதேன
  சுப்ரீணி தோ பவதி பூத பதிர் மஹேச:”!!

  -“ஸ்ரீ புஷ்பதந்தரின் தாமரை மலர் போன்ற முகத்திலிருந்து வெளிவந்த இத்துதி சிவ பிரானுக்கு மிகவும் உகந்தது. இதனை பக்தியுடன் படிப்பவர் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விலகி, சந்தேகமற சிவனுக்குப் பிரியமானவராவார்’ என்று பலஸ்ருதியையும் பாடுகிறார் புஷ்பதந்தர். இது 32 ஸ்லோகங்களையும் 11 பலஸ்ருதிகளையும் கொண்டது.
  நந்தியை எதிர் கொள்ளல்:-

  இத்தோத்திரம் பாடி இறைவனை மகிழ்வித்த புஷ்பதந்தர் கைலாயம் சென்று இறைவன் முன் இப்பாடல்களைப் பாட விருப்பம் கொண்டார். நந்தீஸ்வரர் புஷ்பதந்தரை கைலாய வாயிலில் எதிர்கொண்டு அவரிடம் தன் வாய் திறந்து 32 பற்களையும் காட்டினார். அவற்றில் புஷ்பதந்தர் பாடிய 32 ஸ்லோகங்கள் கொண்ட சிவமகிம்ன: ஸ்தோத்திரத்தைக் கண்டு புஷ்பதந்தர் வியந்தார்.

  Dakshinamurti shiva e1473648030495 - Dhinasari Tamil

  “நந்தீஸ்வரா! இது என்ன அதிசயம்?” என்று வினவினார் புஷ்பதந்தர்.

  “இதில் வியப்பு என்ன உள்ளது? எனக்கே நீர் பாடிய ஸ்தோத்திரங்கள் தெரிந்திருக்கும் போது இறைவனுக்குத் தெரியாதா?” என்று கேட்டார் நந்தி.

  “ஆம். நான் பாடினேன் என்ற என் கர்வம் அழிந்தது. அவனருளால் அவனைத் துதித்து அவனருள் பெற்றேன்,” என்று கூறிப் பணிவோடு வணங்கிச் சென்றார் புஷ்பதந்தர்.

  ஸ்ரீ ராமகிருஷ்ணரும் சிவ மகிம்னா ஸ்தோத்திரமும்:-

  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்பாடலை விவேகானந்தர் பாடிக் கேட்கையில் ஒன்றிரண்டு பாடல்களிலேயே சமாதி நிலையை அடைந்து விடுவது வழக்கம்.

  சுவாமி விவேகானந்தரும் சிவ மகிம்னா ஸ்தோத்திரமும்:
  சிகாகோ மகா சபையில் சிவ மகிம்னா ஸ்தோத்திரம்:
  ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோ சர்ம மத மகா சபையில் சிவ மகிம்னா ஸ்தோத்திரத்தின் ஏழாவது பாடலை எடுத்துக் காட்டி தம் கருத்தை நிலை நாட்டினார்.
  “…..ருசீனாம் வைசித்ரயா த்ருஜுகுடில நாநா பத ஜுஷாம்
  ஸ்ருணா மே கோ கம்ய ஸ்தவ மஸி பய சாமர்ணவ இவா..!”

  இதன் பொருள்:-
  “மக்கள் தம் குணங்களுக்கேற்ப ஒரே சத்தியத்தை அடைய, தாம் சிறந்ததென கருதும் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அது ஏற்பதற்குரியதே. அனைத்து நதிகளின் இலக்கும் சமுத்திரமே. மக்கள் கடைபிடிக்கும் முறைகள் நேரகவோ சுற்றி வளைத்தோ இருந்தாலும் பெற வேண்டிய இலக்கு இறைவா! நீ ஒருவனே!”

  சிவ மகிம்னா ஸ்தோத்திர பாராயணம் ஜபம், தானம், தவம், தீர்த்த யாத்திரைகளை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பாடல்களை பக்தி சிரத்தையுடன் படிப்போர் இக பர சுகங்களை அடைந்தே தீருவர்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  NO COMMENTS

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  one × 5 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.