காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தனது மகனுக்கு கண்ணில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய தமிழகத்துக்கு ரகசியமாக வந்து சென்றார். அதன் பிறகு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாட ராஜஸ்தானில் உள்ள தேசிய ரந்தம்போர்க் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார்.
அந்த மகிழ்ச்சியுடன் ஊருக்கு திரும்பிய பிரியங்கா மிக நெருக்கமான குடும்ப நண்பர்கள், பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஆகியோரை அழைத்து தேநீர் விருந்து கொடுத்தார்.
அப்போது ராகுலின் அரசியல் தலைமை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் விரைவில் அவர் கட்சித் தலைமையை ஏற்று, 2019 மக்களவை தேர்தலை ராகுல் தலைமையில் எதிர்கொள்ள அனைவரும் ஆதரவு தர வேண்டும் என பிரியங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் உரிய முடிவுகள் வராவிட்டால் முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுப்பதாக பிரியங்கா அளித்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால், கூடுதலாக அவர் தெரிவித்த மற்றொரு தகவல் தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு புறையைத் தட்டி விட்டதாம்.
தனது கணவரும் பிரபல தொழிலதிபருமான ராபர் வாத்ராவும் அரசியலுக்கு விரும்புவதாகவும் அவரை உ.பி. மொரதாபாத் தொகுதியில் களமிறக்க பரிசீலித்து வருவதாகவும் பிரியங்கா கூறியிருக்கிறார்.
இந்த கூட்டம் முடிந்த கையோடு தில்லி கான் மார்கெட்டில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற அந்த குடும்ப நண்பர்கள், "இதுவரை காங்கிரஸ் சோதனை காலத்தில் இருந்ததாக நினைத்தோம். ஆனால், உண்மையான சோதனையே இனி தான் வரப்போகிறது என்று கடுப்புடன் கவலையை பகிர்ந்து கொண்டார்களாம்.



