புவனேஸ்வர் :
பா.ஜ., தலைவர்கள் பேச்சை குறைப்பது எப்படி என பாடம் கற்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த பா.ஜ., செயற்குழுவின் 2வது நாளில் பேசிய பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் எங்கு, எப்படி அமைதி காக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது, பா.ஜ., தலைவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறினார்.
மேலும், நான் ஒவ்வொரு முறை டிவி பார்க்கும் போதும் யாராவது ஒரு பா.ஜ., தலைவர் பேட்டி கொடுக்கிறார். சில சமயங்களில் அவர்கள் பேசுவது சர்ச்சை ஏற்படுத்தும் விதத்திலேயே உள்ளது. எப்படி அமைதி காப்பது என்பது பற்றி நீங்கள் பாடம் கற்க வேண்டும்.
யார் மைக்கை நீட்டினாலும் எப்போதும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.
சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் பேசுவதை கட்சியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
தலைவர்கள் தங்களின் வாய்க்கு பூட்டு போட கற்றுக் கொண்டு, கட்சி வேலைகளை மட்டும் பார்த்தால் போதும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார்.



