ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏசி வெடித்ததில் ரயில்வே போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று விடிகாலை சண்முகமும் அவரது மனைவி வெற்றிச்செல்வியும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வீட்டின் பெட்ரூமில் இருந்த ஏசி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில், சண்முகமும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கணவர் சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி வெற்றிச்செல்வி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது
சென்னையில் கடந்த வருடம் பிரிட்ஜ் குளிர்சாதனப் பெட்டி திடீரென தீப்பிடித்து வெடித்து, பத்திரிகையாளர் அவர் மனைவி, தாயார் உயிரிழந்தனர். அது போல், ஏசி.,யும் வெடித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.