ஆன்மீக கேள்வி பதில்:மகா சிவராத்திரி-
கேள்வி – 1 : மகா சிவராத்திரி பண்டிகையை இரவு நேரத்திலேயே ஏன் கொண்டாடுகிறோம்?
பதில்: இரவு விரதங்கள் சில உள்ளன . பகல் விரதங்கள் சில உள்ளன. மகா சிவராத்திரி என்பது ‘அஹோ ராத்திரி’ விரதம் எனப்படுகிறது. பகலும் இரவும் கூட கடைபிடிக்க வேண்டியது. இதன் பெயரிலேயே ராத்திரி என்பது உள்ளது. இரவுநேர வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் காணப்படுகிறது.
மேலும் தேவிக்குக் கூட நவராத்திரி என்று நாம் கொண்டாடுகிறோம்.
இரவு என்பது ‘அந்தர்முக’ நிலைமைக்குக் குறியீடு. அதனால் உள்நோக்கி ஆழும் நிலைக்கு இடமளிக்கும் இரவில் செய்யும் வழிபாடுகளில் தியானத்திற்கும் ஞானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது போன்றவற்றை இரவு விரதங்களாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.
செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.
அதோடு மகாதேவர், லிங்கோத்பவ காலமான ‘துரீய சந்தியா’ நேரத்தில் ஒரு மகா அக்னி லிங்கமாக முதல், இடை, கடை இல்லாத தன் தத்துவத்தை வெளிப்படுத்தியதால் இந்த இரவுக்கு முக்கியத்துவம் உள்ளது. அது நடந்தேறியது மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி அர்த்த ராத்திரி நேரத்தில். அதனால் அந்த நள்ளிரவை நாம் சிவராத்திரி விரதமாக மேற்கொள்கிறோம். அதனால் இது இரவைப் பிரதானமாக கொண்ட பண்டிகையாக கருதப்படுகிறது.
- தெலுங்கில் : பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்