பெரியவாளுடைய கோபமும் ஓர் அனுக்ரஹம் தான்!
(பட்டுப் புடவை வாங்க காஞ்சீபுரம் வந்த பிரமுகருக்கு நேர்ந்த சங்கடம்)
ஒரு சிறு பதிவு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஸ்ரீமடம் வேத பாடசாலை ஆசிரியருக்கு வேண்டிய ஒரு செல்வந்தர் தரிசனத்துக்கு வந்தார்.
வந்தனம் செய்துவிட்டு எழுந்து சற்றுத் தள்ளி நின்றார் பிரமுகர். அவர் ” உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும்” என்று பாடசாலை ஆசிரியரிடம் சொல்லியிருந்தார். அதனால் எப்படியாவது, உடனே அவருக்குப் பிரசாதம் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற துடிப்பில்,ஒரு மரத்தட்டில் பிரசாதத்தை வைத்துப் பெரியவாள் முன் நீட்டினார். பெரியவாள் தம் திருக்கரத்தால், அதைத் தொட்டுத் தர வேண்டும் என்பது உட்கருத்து.
பெரியவாள் மென்மையாகப் புன்னகைத்தார்கள்.
“உங்க சிநேகிதர், காஞ்சீபுரத்துக்கு ஏன் வந்தார் தெரியுமோ? பட்டுப் புடவை வாங்குவதற்காக வந்திருக்கார்! என்னைப் பார்ப்பதற்காக வரவில்லை. தரிசனத்துக்கு என்றே வருகிறர்வகளுக்குப் பிரசாதம் கொடுக்கணும். எங்கோ போகிற வழியில் மடத்துக்குள் நுழைகிறர்களுக்கெல்லாம் பிரசாதம் கொடுக்கணுமா?…..” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டார்கள்.
அந்தப் பிரமுகருக்குத் தன் தவறு புரிந்தது. பெரியவா தரிசனத்துக்கு என்ற நோக்கத்துடன், அவர் ஒரு தடவை கூட காஞ்சீபுரம் வந்ததில்லை.
பாடசாலை ஆசிரியரின் தேறுதல் சொற்கள், அவர் செவிகளில் ஏறவேயில்லை. பிரமை பிடித்தாற் போல் கீழே உட்கார்ந்து விட்டார்.
சற்று நேரம் கழித்து, பெரியவாள் வெளியே வந்தார்கள். பிரமுகரை அழைத்து அன்பாகப் பேசினார்கள். பின் பிரசாதம் கொடுத்தார்கள்.பெற்றுக்கொண்ட பிரமுகரின் கண்களில் நீர் வெள்ளம்.
அதற்குப் பின்னர், பெரியவா தரிசனத்தைக் குறிக்கோளாகக் கொண்டே, குடும்பத்துடன் காஞ்சீபுரம் வரலானார்.
பெரியவாளுடைய கோபமும் ஒர் அனுக்ரஹம் தான்!



