உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 25-வது இடத்தில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவத் தொடங்கியுள்ளது.
உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் கொரோனா வைரஸ், பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த மாநில முதல்வரான அசோக் கெலாட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டிருக்கிறது. அதை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக கூடக் கூடாது. மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, 50 வயதைக் கடந்தவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. அரசின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
முதல்வர் அசோக் கெலாட்கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ராஜஸ்தான் அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழியாகும். அதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது மாநில அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் பொது இடங்களில் நடமாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.