மதுரையில் மயங்கி விழுந்த அப்துல் ரஹீம் என்ற முதியவர்
மரணத்திற்கு, மதச் சாயம் பூசி காவல்துறையினர் படுகொலை
செய்ததாக அவதூறு பரப்புவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்
போது மதுரையில் மயங்கி விழுந்து மரணித்த ஒரு பெரியவர்
மரணத்திற்கு மதசாயம் பூசி காவல்துறையினர் படுகொலை செய்ததாக அவதூறு பரப்பக் கூடிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அருணன் போன்றோருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரை கருப்பாயூரணி பகுதியை சார்ந்த முகம்மது சேட் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது மாமனார் அப்துல் ரஹீம் (75 வயது) வெளியில் இருந்திருக்கிறார்.
ரோந்து பணியில் வந்த காவலர்கள் கடையின் முன்பு கூட்டமாக இருந்தது கண்டு, விதிமீறிய காரணத்தால் கடையை மூடச் சொல்லி இருக்கிறார்கள். அதேநேரம், வயது மூப்பின் காரணமாக திடீரென மயக்கம் அடைந்து, உயிரிழந்திருக்கிறார் அப்துல் ரஹீம். ஆனால், போலீசார் தாக்கியதால்தான் மாமனார் உயிரிழந்துவிட்டார் என்று கூட்டம் கூடி போராட்டம் செய்திருக்கிறார்கள் முகம்மது சேட் மற்றும் உறவினர்கள்.
காவல்துறை டிஎஸ்பி., “காவலர்கள் தாக்கி இறந்தார் என்று நீங்கள் சந்தேகித்தால் புகார் கொடுங்கள்! பிரேத பரிசோதனை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்ல, முகம்மது சேட் என்பவர் காவல்துறையினர் கடையை அடைக்க சொன்னதால் நான்தான் அவ்வாறு கூறினேன் என்னை மன்னித்து விடுங்கள் என் மாமனார் மயக்கம் அடைந்து தான் மரணமடைந்தார் என கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் “காவல் துறையினர் செய்த படுகொலை” என்று எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் அவதூறு பொய்ப் பிரச்சாரம் செய்யக்கூடிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை, காவல்துறையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
“மனிதம்” பார்க்க வேண்டிய நேரத்தில் “மதம்” பார்த்து, நாட்டில் அமைதியை கெடுக்கக் கூடிய செயலைச் செய்யும் இதுபோன்ற நபர்கள் நோயை விட ஆபத்தானவர்கள் என்பதை
பொது மக்கள் உணரக் கூடிய காலம் வெகு விரைவில் இல்லை.
“ஒரே இடத்தில்” இருந்து வந்தவர்கள் என்று சொல்லக்கூடிய ஊடகங்கள், ஒரு பெரியவர் உயிரிழப்பு என்றோ, மதத்தைக் குறிப்பிடாமல், ஒரு தரப்பைச் சேர்ந்த பெரியவர் என்றோ, ஒளிபரப்பாமல் தவறான செய்தியை இந்தப் பெரியவர் மரணத்தில் ஒளிபரப்புகின்றன. இப்படி ஊடக நெறிமுறை எதுவும் இல்லாமல் ஒளிபரப்பும் இவர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே! … என்று ராம.ரவிக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.