
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் 2,570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் 2,323 செவிலியர்கள் ஏற்கெனவே பணி அமர்த்தப்பட்டு சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து வரும் ஆறு மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2,570 செவிலியர்களை பணியில் அமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று தினங்களுக்குள் செவிலியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களுக்கும் பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்புப் பணிகள் வலுவடையும் என்று செய்திக்குறிப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



