
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,674-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 363 பேருக்கு பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 14 – இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 253 ஆண்கள் மற்றும் 194 பெண்கள்.
சென்னையில் மட்டும் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதை அடுத்து மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது.
சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையங்களைக் கொண்டதாக தமிழகம் உள்ளது. இங்கே மொத்தம் 58 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 38 அரசு மற்றும் 20 தனியார் மையங்கள்!
இந்த சோதனை மையங்கள் மூலம், இன்று மட்டும் 11,965 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,92,432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் சோதனையிடப்பட்ட 19 லட்சம் மாதிரிகளில் தமிழகத்தில்தான் அதிகமாக 3 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.
நாட்டிலேயே 0.68 சதவீதம் என்ற குறைந்த இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு சிறந்த சிகிச்சை முறைகளே காரணம்.. என்று தகவல் தெரிவித்தார்.

இதனிடையே, கோயமுத்தூர் மாவட்டம், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. இங்கே தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 146 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார். மற்ற அனைவரும் உடல்நலம் பெற்று வீடு திரும்பினர். இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 114 பேரும் குணமாகிவிட்டனர். கடந்த, 12 நாட்களாக புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. மாவட்டத்தில் 1,466 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்; தொடர்ச்சியாக 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்த பிறகே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.