
சிறப்பான மீட்பு…
மரணத்தை எதிர் நோக்கியிருந்த இளைஞரை துபாயிலிருந்து சிறப்பாக மீட்டது தமிழக பாஜக!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தேனி மாவட்டம் போடி நகரிலிருந்து கணேஷ் குமார் என்ற இளைஞர் டூர் விசாவில் துபாய் சென்றார். விசா முடிவடைந்து திரும்பும் காலத்தில் கொரானா தொற்றின் காரணமாக மற்ற பயணிகள் போல அவரும் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பிரச்சினை அதுவல்ல.
இந்த இடைப்பட்ட காலத்தில் கணேஷ்குமார் மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு ஈரல் பிரச்சினையாகி, கிட்டத்தட்ட 15 கிலோ சடாரென்று குறைந்து அங்கேயே வைத்தியமும் பார்த்து வந்திருக்கிறார். மரணத்தைத் தழுவப் போகிறோம் என்ற அச்சம் மேலோங்க, தனிமை, நோயின் பாதிப்பு முதலியவற்றால் மிகுந்த உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

இவரது மோசமான சூழலைக் கேள்விப்பட்ட தேனி மாவட்ட சேவா பாரதியின் தலைவர் சுந்தரேசன், தேனி மாவட்ட பாஜக தலைவர் பாண்டியனிடம், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். மாவட்டத் தலைவரும், மாநிலத் தலைவர் முருகன் வழிகாட்டுதலுடன் மத்திய அமைச்சகத்தின் உதவியைக் கோரி முறையாக விண்ணப்பித்திருக்கிறார்.
இதற்கிடையில் துபாயிலுள்ள தன் நண்பர்கள் மூலமும் கணேஷ் குமாருக்கு உதவும்படி தேனி மாவட்ட பாஜக தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் நண்பர்கள் குழு கணேஷ் குமாரைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியது. அத்துடன், துபாய் அரசிடன் அவரது சிரமங்களைச் சொல்லி உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்தது. தொடர்ந்து இன்று 22-05-2020 வெள்ளிக் கிழமை விமானம் மூலம் கொச்சின் விமான நிலையத்திற்கு அவரை அனுப்பி வைக்கிறார்கள்.

கொச்சினிலிருந்து சேவா பாரதியின் நிர்வாகி ஏ.ஆர். மோகன் கொச்சின் மாவட்ட ஆட்சியர் மற்றும் கொச்சின் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று கணேஷ்குமாரை அவரது சொந்த ஊரான போடிக்கு வழியனுப்பி வைக்க ஏற்கெனவே ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார்.

இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் இ-பாஸ் வாங்குவது மற்றும் வாகன ஏற்பாடுகளை போடி நகர் பாஜக தலைவர் தண்டபாணி ஏற்பாடு செய்து தயாராக இருக்கிறார். தனிப்பட்ட முறையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கணேஷ்குமாரை மீட்டு வர முயற்சி எடுத்துக் கொண்டாலும், முறையாக அரசாங்கத்திடமும் கணேஷ்குமார் குடும்பத்தினரை மனு கொடுக்கச் சொல்லி அறுவுறுத்தி அவ்வாறே செய்துள்ளனர். இது குறித்த செய்தியும் ஊடகங்களில் வெளியானது!

இத்தனை பேரின் உழைப்பும் உடல், மன சிரமத்தில் தவித்துக் கிடந்த கணேஷ்குமாரை இக்கட்டில் இருந்து மீட்பதற்காகத்தான். இதற்காகப் பாடுபட்ட பாஜக.,வினரை இப்போது பலரும் பாராட்டுகிறார்கள்.
முக்கியமாக கணேஷ் குமாரின் பயணச் செலவு மற்றும் பயண ஏற்பாட்டினைச் செய்த துபாய் வாழ் நண்பர்கள் பட்ட சிரமம். அவர்கள் இத்தனைக்கும் தங்களது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த முகம் தெரியாத நல்லுங்களுக்கு தமிழக மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.
- செய்திக் கட்டுரை: ஆனந்தன் அமிர்தன்