
தமிழகத்தில் பஸ் போக்குவரத்து இன்மையால், பல மாவட்டங்களில் ஆட்டோக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் இயங்கினாலும், கிராமங்களிலிருந்து நகரத்துக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் ஆட்டோவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், கருப்பாயூரணி, வரிச்சூர், சக்கிமங்கலம், திருப்பாலை, அய்யர் பங்களா, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், திருநகர், விளாச்சேரி, மண்டேலாநகர், அவனியாபுரம், விளாங்குடி, பரவை, சமயநல்லூர், மற்றும் மதுரை நகர் பகுதிகளில் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இயக்கப்படும் ஆட்டோக்களில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கின்றனர். கல்மேடு நகரிலிருந்து- மதுரை அண்ணா நிலையத்துக்கு பஸ்களில் ரூ. 15-ம், ஆட்டோக்களில் ரூ. 20-ம் ஆட்டோக்களில் பயணி்ப்போரிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது பஸ்கள் இயக்கப்படாததால், மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களில், கல்மேடு நகரிலிருந்து- மதுரை அண்ணாநிலையம் வரை ரூ. 40-50 வரையிலும், மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் வரை ரூ. 50-ம் கட்டணமாக ஆட்டோ டிரைவர்கள் வசூலித்து வருவதாக மதுரை கல்மேடு நகரைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி மாரியம்மாள் தெரிவித்தார்.
இவை தவிர சில ஆட்டோக்கள், சமூக இடைவெளியில்லாமலும், அதிக ஆட்களை ஏறறி பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆட்டோக்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்!
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை, மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்களை, மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது கண்காணித்தால் தான், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த முடியும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை