
மதுரை: மதுரை மாவட்டத்தில் அக்கினி நட்சத்திர இறுதி நாளான இன்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், மக்கள் மனதும் குளிர்ந்தது.
மதுரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் மதுரை நகர் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அனல் காற்று வீசி வந்தது.
மதுரை நகர் பகுதியை தவிர, சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம், கல்லுப் பட்டி, பேரையூர், மம்சாபுரம், அலங்காநல்லூர், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்தது.. திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் புதன்கிழமை மாலை ஓரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை பெய்து வருவதால், பல கிராமங்களில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு, கிணற்றுப் பாசன மூலம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஓன்றியத்தில், திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களும்அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
மதுரை நகருக்குள் மழை பெய்யாமல் வாட்டி வந்த நிலையில், அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், இன்று மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மதுரை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், தல்லாகுளம், தெப்பக்குளம், டி.ஆர்.ஓ.காலனி, சிந்தாமணி போன்ற பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
மதுரை மாவட்டத்தின் குடிநீருக்காக வைகை அணையில் திறந்து விடப்பட்டிருந்த தண்ணீர் மதுரை வந்து சேர்ந்த நிலையில், மதுரையிலும் மழை பெய்தது மதுரை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை