சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்
வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி
முன்னேறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி போட்டியை நடத்தும் இங்கிலாந்தை
வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், இன்று நடந்த 2 வது
அரையிறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதியது. டாஸ் வென்ற இந்திய
அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264
ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார்,
பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய
அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடியாக
விளையாடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். தவான் 34 பந்துகளில் 46
ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் கோலி -ரோகித் ஜோடி சிரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.
ரோகித் 111 பந்துகளில் தனது 11-வது சதத்தை பதிவு செய்தார். கோலியும் அரைசதம்
அடித்து அசத்தினார்.
ரோகித் சர்மா 123, விராட் கோலி 96 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை
உறுதி செய்தனர். இந்திய அணி 40.1 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 9
விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 123 ரன்கள் எடுத்த
ரோகித்சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை
வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இதனையடுத்து வரும் 18-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.




