
அன்றாடம் கரடிகளின் வருகை நிகழ்வதால், ‘கரடிகள் கிராமம்’ என்றே அறியப்பட்டிருக்கும் நீலகிரி மாவட்டத்தின் கொலைக்கொம்பை கிராமம் தற்போது கொரோனா தொற்றால் அவதிக்குள்ளாகியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மஞ்சூர் சாலையில் 14-வது கிலோ மீட்டரில் உள்ளது கொலக்கொம்பை. இந்தச் சிறிய கிராமத்தில் 150 வீடுகள் இருந்தாலே அதிகம். வனம் சூழ இருக்கும் இந்தக் கிராமத்திற்கும், இதைச் சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கும் தேயிலை விவசாயம்தான் அடிப்படை.
இவர்கள் வாழ்க்கைக்குச் சவாலாக இருப்பது காட்டு விலங்குகள். குறிப்பாக, கரடிகள். வனப் பகுதிகளிலிருந்து ஊருக்குள் வரும் கரடிகள் இரவு நேரங்களில் கதவுகளைத் தட்டுவதும், ‘கர்புர்’ என்று உறுமி மக்களைப் பயமுறுத்துவதும் அவ்வப்போது நடக்கும் விஷயங்கள். ஆளில்லாத வீடு, கடைகளுக்குள் புகுவதும், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பதம் பார்ப்பதும் உண்டு. இங்கே மக்கள் தோட்டங்காடுகளுக்கு வேலைக்குப் போகாத நாட்கள்கூட இருக்கலாம். கரடிகளைப் பார்க்காத நாட்கள் அரிது.
அதேபோல் ஊட்டி, குன்னூர் மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து வருபவர்களில் கரடியால் கடிபட்டு சிகிச்சைக்காக வருபவர்களே அதிகம். படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசுக் கல்லூரி மருத்துவமனைக்கும் அடிக்கடி அனுப்பப்படுவதுண்டு. இப்படி இங்கு வசிக்கும் மக்கள், காலங்காலமாகக் கரடிகளுடனே வாழ்ந்து பழகிவிட்டனர். அப்படி கரடிகளுக்குப் பெயர்போன கொலக்கொம்பை இரண்டு நாட்களாகக் கொரோனா தொற்றால் கதறிக்கொண்டிருக்கிறது.
இங்குள்ள காவல் நிலையத்தில் 9 போலீஸாருக்கு, கொரோனா ஆரம்ப அறிகுறிகள் இருந்ததால் நேற்று உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் மூவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை காவல் நிலையம் மூடப்பட்டது. இங்குள்ள கணினி அறை பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நேற்று மட்டும் மொத்தம் 36 கரோனா நோய்த் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் குன்னூரைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் பணிபுரிந்த தாலுகா அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றியவர்கள், அந்த வருவாய் ஆய்வாளர் குடும்பத்தினர், அவருடன் தொடர்புகொண்டவர்கள் எனப் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தவிர 3 நாட்கள் முன்பு எல்லநள்ளியில் உள்ள ஊசித் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலருக்குத் தொற்று உறுதியானது. அவர் அலுவல் விஷயமாக கோவை சென்றதோடு, அங்கே பலரைச் சந்தித்திருக்கிறார் என்று தெரியவந்த நிலையில் அந்த நிறுவனமே பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அங்கு பணியாற்றும் 755 தொழிலாளர்கள் நீலகிரி மாவட்டத்தின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் வருபவர்கள். அவர்களைக் கண்டறிந்து வீடு, வீடாகச் சோதனை செய்வதும், அவர்களுடன் தொடர்புடைய ஆட்களுக்குக் கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவதும் என சுழன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனர் நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கொலக்கொம்பை கிராமத்தில், அதுவும் கரடிகள் உலாவும் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.
நீலகிரியின் இரண்டாவது நகரமான குன்னூருக்கும், அதற்கடுத்த நிலையில் உள்ள மஞ்சூர் டவுனுக்கும் இடையில் கொலக்கொம்பை அமைந்துள்ளதால் இங்கே வரும் வாகனங்களைத் தடுத்துச் சோதனை நடத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர் கொலக்கொம்பை போலீஸார்.
சோதனைக்கு உட்பட்டவர்களில் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் அடக்கம். சில நாட்களாகச் சென்னையிலிருந்து இவ்வழி வந்தவர்களும் அதிகம். அதில்தான் கொரோனா போலீஸாருக்குப் பரவியிருக்கிறது என்கிறார்கள். அவர்கள் மூலம் கிராம மக்கள் எத்தனை பேருக்குப் பரவியிருக்குமோ?என்பதுதான் இப்போது இங்குள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம்.