சென்னை:
அதிமுக.,வில் இருந்து தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
முன்னதாக, தினகரன் ஆதரவு தமிழக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பியது தமிழக அரசு. தகுதி நீக்கம் தொடர்பாக முழு விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் அளித்த பின்னர், 18 இடங்கள் காலியாக உள்ளதாக அரசாணையும் வெளியிட்டது. இதனால், தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு செப்.20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
ஏற்கெனவே இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனுடன் இவ்வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆளுநர் இன்று தமிழகம் வந்ததும் சட்டசபை கூடும் தேதி அறிவிக்கப் படலாம். சட்டமன்றம் வரும் செப்டம்பர் 21 ம் தேதி கூட்டப்பட உள்ளதாகவும், அன்றைய தினமே அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஜனநாயகத்தை மீறி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். தகுதி நீக்கத்தை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம் என்றும், குடகு விடுதியில் 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், நானும்,கருணாசும் சென்னையில் உள்ளோம் என்று கூறிய வெற்றி வேல், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி காவல்துறையை மாமியார் வீடு என்று பேசியிருப்பது அவர் பதவிக்கு சரியானதா ? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னையில் பரபரப்பு நிலவிய இந்த நேரத்தில், ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் அது தகர்த்தெறியப்படும். தொண்டர்களின் ஆதரவு இருக்கும் வரை கட்சியையோ ஆட்சியையோ தொட்டுக்கூட பார்க்க முடியாது. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று கூறியுள்ளார் நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒரு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று தமிழகம் வரும் பொறுப்பு ஆளுநரால், பிரச்னைகள் தீருமா அல்லது மேலும் சிக்கலாகுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.



