திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ள சம்பவம்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்களை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. காய்ச்சலால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்
சுகாதரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக
ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர், கொசுவைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து தண்ணீர்
தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இது, சுகாதாரத்துறையினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கொசுவைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து
வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம்,
மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றிய தங்கசாமி இன்று இறந்துள்ளார்.
ஏற்கெனவே, சென்னையில் காய்ச்சலுக்குச் சிகிச்சைக்காக சென்னை அரசு
மருத்துவமனைகளில் சில காவலர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இலவசமாக நிலவேம்பு கசாயத்தை வழங்க
ஏற்பாடு செய்தார்.
அதன்பிறகு காய்ச்சலால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை குறைந்தது.
சிறப்பு காவல்படையில் சுகாதார சீர்கேடு காரணமாகக் காய்ச்சல் உள்ளிட்ட
உடல்நலக்குறைவால் பல காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரை லீவ் எடுக்க உயரதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனால்
உடல்நலக்குறைவுகளோடு பலர் பணியாற்றிவருகின்றனர்.
இதுகுறித்து சிறப்பு காவல் படை போலீஸார் கூறுகையில், “கடந்த 15-ம் தேதிதான்
தங்கசாமிக்கும் ஆசிரியை அனுசுயாவுக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்துக்காக தங்கசாமி விடுமுறையில் சென்றிருந்தார். திருமணத்துக்குப்
பிறகு சில தினங்களாக தங்கசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். முதலில்
சாதாரண காய்ச்சல் என்று கருதினோம். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மதுரைத்
தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது, அவர் மூளைக் காய்ச்சல் காரணமாக
இறந்ததாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது.
2016-ல்தான் காவலராகப் பணிக்கு தங்கசாமி சேர்ந்தார். அவரது இறப்பு எங்களைச்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன்பிறகாவது காவலர்கள் உடல் நலத்தில் உயரதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்”
என்றனர் வேதனையுடன்.
செய்தி… கே.சி.சாமி




