புதுதில்லி : இரட்டை இலைச் சின்னம், அதிமுக., கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நவ.27 இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தினகரன் கூறி இருந்தார்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்திற்கு தடை விதிக்கக் கோரி தினகரனோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடர்ந்தால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பித்து விடக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்திலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சார்பில் தனித்தனியாக கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



