தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் அங்கிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக., அணிக்குத் தாவியுள்ளனர்.
இன்று காலை அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் சென்னை அதிமுக., தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடித்தார். ஏற்கெனவே இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ்., இபிஎஸ் தலைமையிலான அணிக்குக் கிடைத்துவிட்டது. இந்நிலையில், அதிமுக., கட்சி அலுவலகமும், கட்சியும் இவர்களால் பயன்படுத்தப் படுகிறது.
ஏற்கெனவே தங்கள் தரப்புக்கு சின்னமும் கட்சியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தி வந்தனர் தினகரன் ஆதரவாளர்கள். அவரை நம்பி, 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்ட நிலையில், சபாநாயகர் அவர்களை பதவி நீக்கம் செய்ததும், பின்னர் அவர்கள் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதும் அவர்களின் மன உறுதியைக் குலைக்கத்தான் செய்தது. இப்படி அவர்களின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், தினகரன் பின்னால் சென்ற எம்.பி.க்களும் இப்போது தங்கள் நிலை குறித்து சிந்திக்கத் துவங்கி விட்டதாகவே தெரிகிறது.
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தினகரன் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகியோர், திடீரென வந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் சிலரும் தினகரன் அணியில் இருந்து மனம் மாறி மீண்டும் முதல்வர் இருக்கும் அணியில் இடம் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.



