
9 மாதங்களுக்கு பின் குற்றால அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி!
குற்றால அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப் படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் கிருமித் தொற்று காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப் பட்டது. இதனால் இந்த முறை சீஸன் குற்றாலத்தில் களை இழந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் எவரும் இன்றி ஊரே வெறிச்சோடிக் காணப்பட்டது.
அருவிகளிலும் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தற்போது, மண்டல பூஜை கால ஐயப்ப சீஸன் சபரிமலைக்கு மாலை அணிந்து வருபவர்கள் குற்றாலத்தில் அருவிகளில் குளித்து பூஜை செய்து பின்னர் சபரிமலை செல்வர் இந்த முறை சபரிமலைக்கு குறிப்பிட்ட அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே சபரிமலை பக்தர்கள் குறைவாகவே வருகின்றனர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பொது மக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றுக்கு செல்லலாம்.
ஒரே நேரத்தில் எத்தனை பேர் சென்றாலும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்.
2 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தவேண்டும் உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், குற்றால அருவிகள் அனைத்திலும் 15 ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.