
மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர்.
மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர்.
இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.