
பதவி ஏற்பு விழாவுக்கு முகூர்த்தம் கூட ரெடியாமே! தெலங்காணா மாநில முதல்வராக கேடிஆர் எப்போது பொறுப்பு ஏற்பார் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் ஆசையோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.
டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட கேடிஆர் விரைவில் மாநிலத்திற்கு முதல்வராவார் என்று கூறி வருகிறார்கள். அதன்படி பதவி ஸ்வீகாரத்திற்கு களம் ரெடி ஆகி விட்டதாக தெரிகிறது. தெலங்காணா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக பிப்ரவரி 18ஆம் தேதி கேடிஆர் பதவி ஏற்பார் என்பது தற்போது பரபரப்பு செய்தி.
இதன்படி தந்தை கேசிஆர் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து விட்டதாக தெரிகிறது. இதன்படி புரோகிதர்கள் முகூர்த்தம் குறித்து கொடுத்து விட்டார்களாம்.
இதற்காக கேசிஆர் யாகங்கள் கூட நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அயுத சண்டி யாகத்தோடுகூட ராஜஸ்மாமளா யாகம் கூட முதல்வர் நடத்தப் போவதாக செய்தி. இந்த யாகங்கள் முழுமை அடைந்த பின்பு மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களாகவே கேடிஆர் முதல்வர் ஆவார் என்ற பிரச்சாரம் ஜோராக நடந்து வருகிறது. மண்டலி சேர்மன் குத்தா ராஜசேகர் ரெட்டி மற்றும் டிஆர்எஸ் தலைவர்கள் கேடிஆருக்கு முதல்வர் பதவி வகிப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று கூறிவருகிறார்கள்.
கேடிஆரின் பதவியேற்புக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பிறகோ அமைச்சர்கள் ஹரிஷ் ராவு, ஈட்டல ராகவேந்தர் ஆகியோர் கட்சி ஒர்கிங் பிரசிடன்டாக நியமிக்கப்பட உள்ளார்கள் என்று தெரிகிறது. கட்சியின் தலைவராக கேசிஆர் தொடர்வார்.
கேடிஆர் 2014 லிருந்து மாநில அமைச்சராகவும் டிஆர்எஸ் கட்சியின் ஒர்க்கிங் பிரசிடென்டாகவும் பணிபுரிந்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் மட்டும் அப்படிப்பட்டது எதுவும் இருக்காது… நடக்காது என்று எடுத்தெறிந்து பேசி வருகிறார்கள்.
மொத்தத்தில் கேடிஆர் முதல்வராக வரப் போகிறாரா இல்லையா என்ற விஷயம் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால் தெரிந்துவிடும்.