
சிவகங்கை அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு.
சிவகங்கை அருகே சின்ன பொன்னம்பட்டி யைச் சேர்ந்தவர் மூதாட்டி அழகம்மாள் (85) . இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பக்கவாட்டு மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சிக்கிக் கொண்ட மூதாட்டி காப்பாற்றுமாறு உதவி குரல் எழுப்பினார். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் மழையின் காரணமாக மண் சுவர் இடிந்து மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.