
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
93. நிதானமே பிரதானம்!
ஸ்லோகம்:
சஹசா விததீத ந க்ரியாம் அவிவேக: பரமாபதாம் பதம் |
வ்ருணதே ஹி விம்ருஸ்யகாரிணம் குணலுப்தா: ஸ்வயமேவ சம்பத: ||
– கிராதார்ஜுனீயம் – பாரவி.
பொருள்:
அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யக்கூடாது. விவேகமின்மையே அனைத்து ஆபத்துகளுக்கும் காரணம். ஜஸ்வர்யங்கள் அனைத்தும் நற்குணமுள்ளவனையே வந்தடையும். யோசித்து, திட்டமிட்டு செயல்படுபவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.
விளக்கம்:
திட்டமிட்டு செயல் புரி என்று போதிக்கும் புகழ்பெற்ற சுலோகம் இது. கிராதார்ஜுனீயத்தில் மகாகவி பாரவி கூறுவது.
தர்மபுத்திரன் கூறுவதாக உள்ள இந்த சுபாஷிதம் எல்லா காலத்திற்கும் ஏற்புடையது. யோசித்து முடிவெடுக்கும்படியும் விவேகத்தோடு செயல் புரியும்படியும் போதிக்கும் ஸ்லோகம் இது.
யோசிக்காமல் அவசரப்பட்டு செய்யும் பணிகள் ஆபத்தில் முடியும். விவேகத்தோடு எது சரி? எது தவறு? என்று ஆய்ந்தறியவேண்டும். விவேகமற்றவனுக்கு சிந்திக்கும் திறன் நின்றுவிடுகிறது. ஆவேசம் அதிகமாகிறது. ஆத்திரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் ஆபத்தில் முடியும். குழப்பமான சூழ்நிலையில், சமயத்திற்குத் தகுந்தாற்போல் யோசித்து முடிவெடுக்கும் குணம் நம்மை அபாயத்தில் இருந்து காப்பாற்றும்.
அவசரப்பட்டதால் வந்த அனர்த்தங்களுக்கு உதாரணமாக பஞ்ச தந்திரத்தில் உள்ள பாம்பும் கீரிப்பிள்ளையும் கதை புகழ்பெற்றது.
ஒரு குடும்பத்தில் குழந்தையோடு கூட ஒரு கீரிப்பிள்ளையும் அன்பாக வளர்த்து வந்தார்கள். பெற்றோர் வீட்டில் இல்லாத போது குழந்தையின் தொட்டிலை நெருங்கிய பாம்பினைப் பார்த்து கீரிப்பிள்ளை அதனோடு போரிட்டு கொன்றுவிடுகிறது. வாயெங்கும் வழியும் இரத்தக் கறையோடு இருந்த கீரிப்பிள்ளையை பார்த்த தந்தை, தன் குழந்தைக்கு அது தீங்கிழைத்துவிட்டது என்றெண்ணி அந்த கீரிப்பிள்ளையை முன்பின் யோசிக்காமல் அடித்து கொன்று விடுகிறான். உள்ளே வந்து இறந்து கிடந்த பாம்பைப் பார்த்த பின்தான் உண்மை விளங்கிற்று. தன் அவசரச் செயலால் வந்த வினையை எண்ணி புலம்பி அழுதான்.