
சென்னையில் உள்ள குளக்கரை பகுதியை சார்ந்தவர் கவிதா. இவரது மகன் மவுனிக் (வயது 10). இவர் கக்கன் தெரு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் அங்குள்ள அம்பாள் நகர் சிறுவர் பூங்காவிற்கு விளையாட சென்றுள்ளான். அங்கு பூங்காவின் கதவு தாழிடப்பட்டு இருந்ததால், அருகில் இருந்த இரும்பு கதவு வழியாக சுவற்றை தாண்டி குதிக்க முயற்சி செய்துள்ளான்.
இதன்போது எதிர்பாராத விதமாக மவுனிக்கின் சட்டை காலர் பகுதி இரும்பு கிரில் கேட்டில் மாட்டிக்கொள்ளவே, அவனது கழுத்து இறுக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளான். சிறுவனை காணாது தேடியலைந்த பெற்றோர்கள், பூங்காவின் கிரில் கேட்டில் சிறுவன் தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து சிறுவனை மீட்டு பழைய பெருங்குளத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்., சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.