
கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை சேர்ந்த கபீர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கபீரின் மனைவி பசிலா மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரவிபுதூர்கடை யில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்ததில் சமயலறையிலிருந்து திடீரென்று தீ பிடித்தது, அக்கம்பக்கத்தினர் உடனே குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு முதற்கட்டமாக சமையல் எரிவாயு சிலிண்டரை அகற்றினர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். குடியிருப்பு வீட்டில் தீ பிடித்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த பிரிட்ஜ் வெடித்தது தெரியவந்துள்ளது. தீ பிடித்ததும் துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.