
- திருமங்கலம் அருகே ஜெ. கோவில் திறப்பு விழா
- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்
திருமங்கலம் :
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருக்கோவிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
திருமங்கலம் அருகே உள்ள டி. குன்னத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலுக்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், கே.டி. ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கோ பூஜை நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கறவை மாடும் கன்றும் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிச்சாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் ஏழு அடி உயர எம்ஜிஆர் உருவச் சிலையையும் ஜெயலலிதாவின் சிலையையும் முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது,…

எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் செய்கின்ற நற்பணிகள் அவர்கள் இறந்த பிறகும் மக்களுக்கு பயன்படுகிறது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தனர். அவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது நாம்தான் பிள்ளைகள். எனக்கு பின்னால் நூறு ஆண்டுகள் அதிமுக வாழும் என்று ஜெயலலிதா கூறினார் எனவே மீண்டும் அவருடைய ஆட்சி மலர வேண்டும்.
எம்ஜிஆர் பசித்த வயிற்றுக்கு உணவு போட்டார் ஜெயலலிதா மக்களின் தேவையை உணர்ந்து பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியருக்கு சீருடை, நோட்டுப் புத்தகங்கள், சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கினார்.
இந்த இரண்டு தலைவர்களும் வாழ்ந்த காலம் பொற்காலம்.எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி னோம்.சென்னையில் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை போல் தோற்றம் கொண்ட நினைவிடத்தை திறந்துவைத்தோம்.ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளோம்.எனவே மீண்டும் அவர்களின் ஆட்சி மலர வேண்டும் என்று கூறினார்.

ஆள் பிடித்தாலும் வேல் பிடித்தாலும் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது – ஓபிஎஸ் பேச்சு…
முதல்வருக்குப் பின் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது,
தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியவர்கள் தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால் நடிக்க தொடங்கிவிட்டனர். மக்கள் இந்த தீய சக்திகளை பார்க்கிறார்கள்.
தெய்வங்களும் பார்க்கின்றது.வடநாட்டிலிருந்து ஆள் பிடித்தார்கள்.வேறு வழியில்லாமல் வேல் பிடித்து இருக்கிறார்கள். ஆள் பிடித்தாலும் வேல் பிடித்தாலும் அதை மட்டும் பிடிக்க முடியாது.
கொக்கு மீனை கவ்வாதிருந்தால், புலி புள்ளிமானை துரத்தாமல் இருந்தால் நானும் கொள்ளை அடிக்காமல் இருந்திருப்பேன்.இது கருணாநிதியின் திரைப்பட வசனம். இது வசனம் மட்டும் இல்லை திமுகவின் கொள்கையே இதுதான் .
10 வருடம் ஆட்சி இல்லாமல் அவர்கள் கை நமநமத்து காய்ந்து போய் இருக்கிறது. ஆட்சி மட்டும் கிடைத்து விட்டால் காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் பாய்ந்தது போல் பாய்ந்து விடுவார்கள். இது மக்களுக்கும் தெரியும். ஸ்டாலின் நிலை மிகவும் பரிதாபமாக போய்விட்டது என்று பேசினார்