
சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து வாழ்க்கையில் ரியல் ஜோடியாக இணைந்த சீரியல் நடிகர் பிரஜின் – நடிகை சாண்ட்ரா தம்பதிகள் தங்களுடைய ட்வின்ஸ் மகள்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடியுள்ளனர்.
தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் முக்கிய ஊடகங்களாக மக்களிடையே பிரபலமாக உள்ள இந்த காலத்தில் சினிமா நட்சத்திரங்களைவிட டிவி சீரியல் நடிகர்கள் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். ஏனென்றால், ஒரு டிவி சீரியலில் நடிப்பவர்கள் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நாட்கள் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர்களின் வீடுகளிலேயே தொலைக்காட்சி வழியாக செல்கிறார்கள்.
சில ஆண்டுகளாக டிவி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர் – நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்து திருமணம் செய்து வருகின்றனர்.

அப்படி பல உதாரண ஜோடிகளை கூறலாம். சேத்தன் – தேவதர்ஷினி, சஞ்சீவ் – ப்ரீத்தி, ஸ்ரீகுமார் – ஷமிதா, போஸ் வெங்கட் – சோனியா, சமீபத்தில் சஞ்சீவ் – ஆல்யா மானசா என்று இந்த ரீல் டு ரியல் ஜோடி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வரிசையில், டிவி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக திருமணம் செய்துகொண்டுள்ள பிரஜின் – சாண்ட்ரா ஜோடி குறிப்பிடத்தக்கவர்கள்.
தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் பிரஜின், விஜய் டிவி ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானார். அதே போல, பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா. ரீல் ஜோடியாக இருந்த பிரஜின் – சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிய பிரஜினுக்கு சரியான வாய்ப்பு அமையாததால் அவர் மீண்டும் டிவி சீரியலுக்கே திரும்பியுள்ளார். தற்போது பிரஜின் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வருகிறார்.
பிரஜின் – சாண்ட்ரா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான சாண்ட்ராவுக்கு 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. தங்கள் ட்வின்ஸ் குழந்தைகளுக்கு ருத்ரா, மித்ரா என்று பெயரிட்டனர். பிரஜின் – சாண்ட்ரா தம்பதி தங்களின் இரட்டை பெண் குழந்தைகளின் 2வது பிறந்தநாளை ஆட்டம் பாட்டம் என்று கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் வெற்றிகரமான தம்பதியாக வலம் வரும் பிரஜின் – சாண்ட்ரா தம்பதிகள் தங்களின் ட்வின்ஸ் மகள்களின் பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.