
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நுழைவாயில் கதவை திறக்கும்போது, திடீரென ஏற்பட்ட விபத்தில் கோயில் ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயியில் கடந்த மார்ச் 18ம் தேதி பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 28ம் தேதி திருக்கல்யாணத்துடன் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
இதை தொடர்ந்து வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. இந்நிலையில் நேற்று காலை காஞ்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
அபபோது, ஏகாம்பரநாதர் கோயிலின் தெற்கு கோபுரம் கதவை திறக்க கோயில் ஊழியர்கள் தியாகராஜன், லட்சுமி அம்மாள் ஆகியோர் சென்றனர்.
அவர்கள், அங்கிருந்த பக்தர்கள் 3 பேர் உதவியுடன் கதவை திறந்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது பலத்த காற்று வீசியதால் கதவு வேகமாக திரும்பி வந்து அவர்கள் மீது இடித்தது.
இதில் கோயில் காவலாளி தியாகராஜன், ஊழியர் லட்சுமி அம்மாள், பக்தர்கள் 3 பேர் காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், காற்றின் வேகத்தில் கதவு அங்கும் இங்குமாக ஆடியது. உடனே அங்கிருந்தவர்கள், பெரிய கருங்கல்லை வைத்து, கதவை நிறுத்தினர்.
காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து லட்சுமி அம்மாள் , மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.