முகநூல் மூலமாக திருமணமான பெண்களை குறிவைத்து தனிமையில் உறவில் இருந்து நகைகளை திருடும் ரோமியோக்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிராமம் கடுவனூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் உமைபாலன் மனைவி பாலின் ராணி (வயது 36). இவரது கடைக்கு துணி வாங்க வந்த மர்ம நபர் ஒருவர் பாலின் ராணி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி அன்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தினர். இது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.
ராஜு அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்பழகன், தலைமை காவலர்கள் சிவஜோதி, வீரப்பன், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் விலை உயர்ந்த காரில் வந்த நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் காரின் பதிவெண் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.
விசாரணையில் அந்த கார் பழனி கோதைமங்களம் பகுதியை சேர்ந்த விஸ்வாசகுமார் என்பவரது இரண்டாவது மகன் மனோஜ்குமார் (வயது 25) என்பவரது பெயரில் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மனோஜ்குமாரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மனோஜ்குமார் கடந்த ஆறு மாதத்திற்கு முன் முகநூல் வாயிலாக பாலின் ராணியுடன் முகநூல் நண்பராக பழகி உள்ளார்.
பின்னர் பாலின் ராணியை நேரில் சந்திக்க பழனியில் இருந்து காரில் வந்த மனோஜ் கடுவனூர் பகுதியில் உள்ள பாலின் ராணியின் துணிக்கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உள்ளனர். அப்போது பாலின் ராணியின் கழுத்தில் அணிந்து இருந்த நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.
பின்னர் இது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று பாலின் ராணி கொடுத்த புகார் அளித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணை தீவரபடுத்தினர். அவர்களது விசாரணையில் மனோஜ் குமார் மொபைல் போனை ஆய்வு செய்தனர்.
அதில் கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்களிடம் முகநூல் வாயிலாக நட்பாக பழகி, பின்னர் பாலியலில் ஈடுபட்டு கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.
இதில் ஒருவர் கூட இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்காத காரணத்தால் இந்த ஆண்ட்டி ரோமியோக்கள் சிக்காமல் சுற்றி வந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மனோஜ்குமாரை கைது செய்த போலீசார் இந்த குற்ற செயலுக்கு அவருடன் உறுதுணையாக இருந்த அவரது நண்பர் பழனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் கெளதம் (வயது 27) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மனோஜ் குமாரிடம் இருந்து 2 லட்சம் ரொக்கம், 10 சவரன் தங்க நகை ஆகியவற்றை தனிப்படை போலீசார் மீட்டனர்.
மேலும் இந்த லீலை செயல்களுக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த XUV 500 கார் மற்றும் R15 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது