சிறுத்தை பாய்ந்ததில் மூதாட்டியின் வீட்டு மேற்கூரை உடைந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகர் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக இரண்டு இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை பகுதியில் வசிக்கும் அருக்காணி என்ற மூதாட்டி ஒருவரின் வீட்டின் சமையலறையில் இருக்கும் கூரை திடீரென இடிந்து விழுந்துவிட்டது.
இதனையடுத்து சத்தம் கேட்டதும் அங்கு சென்ற மூதாட்டி சிறுத்தை ஒன்று மேலிருந்து எட்டிப் பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் அச்சத்தில் அந்த மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் சிறுத்தை அங்கிருந்து ஓடி விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்