
அவிநாசி அருகேயுள்ள, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நள்ளிரவில் கள்ளச்சாராயம் காய்ச்சிய, 2 பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கருமாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவிநாசி மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளி உத்தரவில், எஸ்.ஐ.,கள் சர்வேஸ்வரன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார், நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு, ரெய்டு நடத்தினர். பள்ளிக்குள் உள்ள கழிப்பறை அருகே, சமையல் காஸ் அடுப்பு வைத்து, சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரிய வந்தது.
அவர்களை விசாரித்ததில், செம்பாக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன், 55. ஆரான் (எ) ஆறுச்சாமி, 65, விக்னேஷ்வரன், 28, அவரது மனைவி காய்த்ரி (எ) தீபா, 23. சராசாள் (எ) லட்சுமி, 45 ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து, அங்கிருந்த, 10 லிட்டர் சாராயம், 50 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆண் குற்றவாளிகள், திருப்பூர் சிறையிலும், பெண் குற்றவாளிகள், கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் பலரும் ஈடுபடத் துவங்கியுள்ளனர்; கடந்த, பல ஆண்டுகளுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட பலரும் மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தொழிலில் ஈடுபட துவங்கியுள்ளனர் என்பது, போலீசாரின் கண்காணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதை தவிர்க்க, குற்றவாளிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.