சென்னை: எடிட்டிங் பணியின்போது திடீர் மயக்கம் அடைந்த எடிட்டர் கிஷோர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மதியம் 2.30 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் எடிட்டர் கிஷோர். ‘ஈரம்’, ‘ஆடுகளம்’, ‘பயணம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘பரதேசி’, ‘மதயானைக் கூட்டம்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர். திருமணம் செய்துகொள்ளாத 32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர். தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுவர். இவர், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசாரணை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை. கோமா நிலையிலேயே மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தங்கள் இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்
Popular Categories



