பெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்து களம் இறங்கியது. முதலில் ஆடிய அந்த அணி 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன் எடுத்தது. இந்தியாவுக்கு 183 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பேட்டிங் செய்யக் களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் துவக்கம் முதலே திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் வேகப் பந்து வீச்சை எதிர்கொள்வதில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மென் ஸ்மித்தும், கெய்லும் திணறினர். ஸ்மித் 20 பந்துகளில் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கெயில் 21 ரன் எடுத்தார். சாமுவல்ஸ் 2, ராம்தின் 0, கார்ட்டர் 21, சிம்மன்ஸ் 9 என முன்னணி பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். சமி 26 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்த ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. ஆனால் பின்னர் வந்த ஹோல்டரும் டெய்லரும் ஓரளவு நின்று விளையாடினர். ஹோல்டர் 57 ரன் எடுத்தார். டெய்லர் 11 ரன் எடுத்தார். இதனால் 44.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 182 ரன் எடுத்தது. இதை அடுத்து, இந்திய அணிக்கு 183 ரன் என்ற இலக்கை அந்த அணி நிர்ணயித்தது. இதை அடுத்து, 182 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்திய அணி, துவக்கம் முதலே மிக நிதானமாக ஆடியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். ரோஹித் 7 ரன்னிலும், தவான் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் நடுவரிசையில் ஆக்ரோஷம் காட்டிய கோலி 36 பந்துகளில் 33 ரன் எடுத்தார். ரஹானே 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா, 25 பந்துகளில் 22 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதை அடுத்து, களம் இறங்கிய கேப்டன் தோனி, மிக நிதானமாக நிலையை உணர்ந்து ஆடினார். ஆனால் ஜடேஜா 13 ரன்களில் ஆட்டம் இழந்ததும், 134 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் இருந்தது இந்திய அணி. அப்போது களம் இறங்கிய அஷ்வின், தோனியுடன் ஜோடி சேர்ந்து மேலும் விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடினார். ஒன்றும் இரண்டுமாக சேர்த்தார் அஷ்வின். அவர் 32 பந்துகளில் 16 ரன் சேர்த்தார். தோனி, 56 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன் சேர்த்தார். இருவரும் ஆட்டம் இழக்காமல் வெற்றிக்குத் தேவையான ரன்களை சேர்த்தனர். இந்திய அணி 39.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை அணியை வெற்றி கொண்டது. 3 விக்கெட் எடுத்த இந்திய அணியின் முகமது ஷமி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகக் கோப்பை: இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Popular Categories



