பாக்தாத்: ஈராக் நாட்டில் மிகப் பழைமையான அசிரியன் நகரான நிம்ருட்டை ஐஎஸ் பயங்கரவாதிகள் தகர்த்தனர். உலகின் மிகப் பழைமையான புராதனச் சின்னங்களைத் தகர்க்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சமீபத்திய செயல் இது என இதனை ஈராக் அரசு தெரிவித்தது. அருகில் உள்ள மோசுல் நகரைச் சேர்ந்த பழங்குடியினர் இது குறித்து செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். சன்னி பிரிவு இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த அடிப்படைவாதிகள், ஈராக்கின் இஸ்லாமிய மயமாக்கத்துக்கு முந்தைய பழமை வாய்ந்த சிலைகள், புராதனச் சின்னங்களை தகர்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைக்ரிஸ் ஆற்றின் கரையில் உள்ள உலகின் ஒரு மிகப் பெரும் சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த புராதன நகரை அவர்கள் தரை மட்டமாக்கினராம். இது குறித்து ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், மோசுல் நகரின் பழைமை வாய்ந்த அருங்காட்சியகங்களை சிதைப்பதைக் காட்டியுள்ளனர்.



