
‘தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடக விவாதங்களில் இனி அதிமுக., பங்கேற்காது’ என அதிமுக., தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை:


மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கின்றன. அது குறித்து சிறிதளவும் கவலைப்படாமல் ஊடக நிறுவனங்கள் அதிமுக., புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், கட்சி தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் விவாத தலைப்புகளை வைத்து, நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
இது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. எனவே ஊடக விவாதங்களில் அதிமுக., சார்பில் கட்சி நிர்வாகிகள், செய்தி தொடர்பாளர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள்.
கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி, யாரையும் தங்கள் ஊடகம் வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக., என்று அடையாளப்படுத்த வேண்டாம்… என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே தமிழகத்தில் பாஜக.,வும் இதே போன்ற முடிவை எடுத்துள்ளது. பாஜக., சார்பில் ஊடகங்களின் விவாதங்களில் எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியாக இது போல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதும் புறக்கணிப்பதும், ஊடகங்களில் திமுக., சார்பு அரசியல் நிலைப்பாட்டையே வெட்ட வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.



