
திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.
திருப்பூர் போலீசார் அந்த சடலம் தொடர்பான புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்து, இது குறித்து விசாரிக்கும்படி கூறினார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் கல்லூரி சாலையில் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தோஷ்குமார் என்பவர் கடந்த மூன்று நாட்களாக மாயமானது குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. சந்தோஷ்குமாரின் சொந்த ஊர் திருவாருர் மாவட்டம் ஆகும்.
இதுபற்றி போலீசார் விசாரணையில் இறங்கியபோது, சந்தோஷ்குமார் மாயமான நாளன்று முருகேஸ்வரி என்பவரின் மகனுடன் வெளியில் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் முருகேஸ்வரி வீட்டுக்கு சென்றனர்.
அப்போது முருகேஸ்வரி மகன் ஆரோக்கிய தாஸுடன் சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக தேனிக்கு விரைந்த போலீசார் முருகேஸ்வரி மற்றும் அவரது மகன் ஆரோக்கிய தாஸ் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சடலமாக கிடந்த சந்தோஷ்குமாரும், முருகேஸ்வரியும் ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கணவர் தேனியில் இருக்கும் நிலையில், மகனுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார் முருகேஸ்வரி. சந்தோஷ்குமார் முருகேஸ்வரிக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சந்தோஷ்குமாருக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட தொடங்கியது. இதனை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட சந்தோஷ்குமார், முருகேஸ்வரியை பாலியல் அடிமையாக கொடுமைப்படுத்த தொடங்கினார்.
ஆரோக்கிய தாஸ் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற சந்தோஷ்குமார், மது அருந்தி விட்டு முருகேஸ்வரியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்த தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் கொடுமை அதிகமாக இதற்கு முருகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி தருமாறு சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகேஸ்வரி சந்தோஷ்குமார் தனக்கு செய்த கொடுமைகள் குறித்து மகன் ஆரோக்கிய தாஸிடம் கூறி கண்ணீர் விட்டு கதறிவுள்ளார்.
இருவரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமார் வீட்டுக்கு சென்ற ஆரோக்கிய தாஸ் அவரை மது அருந்த வருமாறு அழைத்து வந்துள்ளார்.
சந்தோஷ்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்த ஆரோக்கிய தாஸ் தனது தாய் மற்றும் நண்பர் பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து மது போதையில் இருந்த சந்தோஷ்குமாரை சித்தரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அந்த சடலத்தை வீசுவதற்கான இடம் தேடி சடலத்தை இரு சக்கர வாகனத்தில் வைத்து ஊர், ஊராக சுற்றியுள்ளனர்.
இதன் பின்னர்தான் கல்லாங்காடு பாறைக்குழியில் சடலத்தை பாறைக்குழியில் வீசி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து முருகேஸ்வரி, ஆரோக்கிய தாஸ் மற்றும் பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தையே இந்த கொலை அதிர வைத்துள்ளது.



