அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் ‘மாஃபா’ என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின் தன் வணிகப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனால் விரக்தி அடைந்த அவர், மீண்டும் தன் வணிகப் பொறுப்புகளை தொடர முடிவு செய்துள்ளார்.
தற்போது அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலராக உள்ள மாஃபா பாண்டியராஜன், மாஃபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, ‘மாஃபா’ மனிதவள நிறுவனம் ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால் நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல் தீவிர அரசியலில் ஈடுபட்டேன். தற்போது தொழிலை கவனிக்க முடிவு செய்து பொறுப்பேற்றுள்ளேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்துவேன்.
சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக அரசியலுக்கு சற்று ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில் அ.தி.மு.க.,வில் பொறுப்புகளை தொடர்கிறேன் என்றார்…
கே.பாண்டியராஜன் அறிவிப்புக்கும், நிறுவனங்களின் பொறுப்பை மீண்டும் ஏற்றதற்கும் அவரது டிவிட்டர் பதிவுகளில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய தெலங்காணா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தராஜனின் கணவரும் சிறந்த மருத்துவருமான டாக்டர் சௌந்தர்ராஜனும் தனது வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.