
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லெட்டுகளை சாப்பிட்ட 3 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வீரக்கல்புதூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட குப்பை கிடங்கு பகுதியில் காலாவதியான சாக்லெட் மிட்டாய்களை மர்மநபர்கள் சிலர் மூட்டை மூட்டையாக கொட்டி சென்றுள்ளனர்.
இவற்றை அந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும், கால்நடைகள் காகிதத்தோடு தின்றதாக கூறப்படுகிறது. இதில் ஜீரண கோளாறு ஏற்பட்டு 3 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மேலும், ஒரு பசு மாடு, 8 ஆட்டுக்குட்டிகளுக்கும் உடலை நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கால்நடைகளை இழந்தவர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று குப்பை கிடங்கை ஆய்வு செய்தார்.
பின்னர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி நிர்வாகத்தினருடன் பசு மாடுகள் இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காலாவதியான சாக்லேட்டுகள் கொட்டப்பட்டு உள்ள குப்பைக்கிடங்கின் அருகே சிறுவர் பள்ளிக்கூடமும் அமைந்துள்ளது.
தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களிடம் இவை கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.