கன்னிகாதானம் இந்த காலத்துக்கும் தேவையா’ என, மணப்பெண் கேள்வி எழுப்புவதாக வரும் விளம்பரம், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் திருமண ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அந்த விளம்பரத்தில் மணப்பெண்ணாக நடிக்கிறார்.
திருமணம் நடக்கும் நேரத்தில், ‘ஒரு பெண்ணை தானமாக வழங்கும் பழங்கால நடைமுறை இனியும் வேண்டுமா’ என, அந்த விளம்பரத்தில் ஆலியா பட் கேள்வி எழுப்புகிறார்.
இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் புதிய விவாதத்தையும் துவக்கியுள்ளது. சமூகவலை தளங்களில் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பெண்கள் என்ன ஒரு பொருளா, அவர்களை தானமாக வழங்குவதற்கு’ என, ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ஹிந்துக்களின் திருமண நடைமுறையில் உள்ள இந்த பாரம்பரியத்தின் அர்த்தத்தை உணராமல், விளம்பரத்தை பிரபலமாக்குவதற்காக சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும், சிலர் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
நடைமுறை கிறிஸ்துவர்கள் திருமணத்திலும் கன்னிகாதானம் நடைமுறை உள்ளதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒரு பக்கம் சர்ச்சையையும், மற்றொரு பக்கம் விவாதத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஆலியா பட் நடித்த விளம்பரம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, பிரபல நிறுவனத்தின் ஆடைகளை விற்பனை செய்து வரும், நவி மும்பையில் உள்ள வேதாந்த் பேஷன்ஸ் முன், ஹிந்து அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விளம்பரத்தை திரும்ப பெறுவதுடன், அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.