தமிழகத்தில் மட்டும் எந்தவித திட்டத்திலும் பிரதமரின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இடம்பெறக்கூடாது என்று, பாஜக., தேசிய துணை தலைவர் சுதாகர் ரெட்டி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பாஜக தேசிய துணைத் தலைவரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தென்காசி திருநெல்வேலி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளேன். பிரதமர் மோடியின் 20 வருட சமூக சேவையை பாராட்டும் விதமாக சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அக்டோபர் 7 வரை இந்தியா முழுவதும் மக்களுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல் தொடங்கிய தினம் முதல் இந்த அளவுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. மக்களே மக்களால் மக்களுக்காக என்று இல்லாமல் பணமே பணத்தால் பணத்துக்காக என்கிற கொள்கையின் அடிப்படையில் திமுக இயங்கி வருகிறது.
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக எவ்வளவு முயற்சித்தாலும் பாஜக அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
மேலும், தமிழகத்தில் திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் கோயில்கள் திறக்கப்படாமல் உள்ளது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எங்க கோவில்களும் திறக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு வலியுறுத்தி பாஜக சார்பாக வருகிற 7-ஆம் தேதி அமைதியான முறையில் தர்ணா, போராட்டம் நடைபெற உள்ளது. இந்தியா தமிழகத்தை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
எங்கும் கொரோனா அதிகரிக்கவில்லை. ஆனால், கொரோனாவை, காரணம் காட்டி திமுக அரசு எப்படி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கொரோனா பரவும் என்றால் அனைத்தையும் மூட வேண்டும். ஆனால், டாஸ்மாக் கடைகளை மட்டும் பிறப்பதற்கு காரணம் வருமானத்திற்காக தான். வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
பிரதமர் மோடி 13 ஆண்டுகள் முதலமைச்சராக ஏழு ஆண்டுகள் பிரதமராகவும் பொது சேவையில் இருந்து வந்துள்ளார் சுதந்திரத்திற்குப் பிறகு விடுமுறை எடுக்காமல் உடல்நலக் குறைவுகள் ஏற்படாமல் செயல்பட்டு வரும் ஒரே பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடியின் செயல்பாடு களில் 6 லட்சத்து 42 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா உட்பட மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் புகைப்படத்துடன் பிரதமர் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எந்தவித திட்டத்திலும் பிரதமரின் புகைப்படம் இடம் பெறவில்லை.
இதில், எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இடம்பெறக்கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்த கேள்விக்கு:
பிஜேபி அரசு விவசாயிகளுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. மேலும், இடைத்தரகர்களை வேரறுப்பது தான் இந்த வேளாண் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
நமது பிரதமர் முன்னாள் விவசாயி என்பதால், இந்தியாவிற்கு பலவிதமான விவசாய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடந்தது எதிர்பாராத விதமாக நடைபெற்றது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றன… என்றார்.