கடலுார் மாவட்டத்தில் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது
மாவட்டத்தில் இது வரை தகுதியான 22 லட்சம் பேரில் நேற்று வரை 15 லட்சத்து 15 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 11லட்சத்து 73 ஆயிரத்து 473 பேர் முதல் தவணையும், 3 லட்சத்து 42 ஆயிரத்து 456 பேர் இரண்டாவது தவணையும் செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
கடந்த மாதம் 12ம் தேதி நடந்த முகாமில், 88 ஆயிரத்து 190 பேர், 19ம் தேதி 55 ஆயிரத்து 92 பேர், 29ம் தேதி 1லட்சத்து 15ஆயிரத்து 590 பேர், கடந்த 3ம் தேதி நடந்த முகாமில் 71 ஆயிரத்து 155 பேர் உட்பட 4 வாரங்களாக நடத்திய முகாம்களில் மட்டுமே 3 லட்சத்து 30ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது வரை இரண்டாவது தவணை 3 லட்சத்து 42 ஆயிரத்து 456 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.
இரண்டாவது தடுப்பூசிக்கான காலக்கெடுவை எதிர்பார்த்து பலர் காத்திருந்த நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக மொபைலில் எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள், சுகாதாரத்துறையில் கேட்டதற்கு, அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக மழுப்பலாக பதில் கூறி அனுப்பி வருகின்றனர்.
இப்பிரச்னை கடந்த வாரம் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம் என, மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது.
இதனால், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியுமா என, பலரும் குழப்பமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் இலக்கை அதிகப்படுத்தி காட்டுவதற்காக, இவ்வாறு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொது மக்கள் கூறுகையில், நாங்கள் ஆதார் நகல் மற்றும் மொபைல் எண் கொடுத்து முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்.
இதற்கிடையே 2வது தவணை செலுத்துவதற்கான நாட்கள் நெருங்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே மொபைல் போனிற்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.
இதனால் நாங்கள் உண்மையாகவே 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கின்றனர்.
எனவே, எங்களுக்கு முறையாக 2வது தவணை தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர். இப்பிரச்னை தொடர்பாக சுகாதாரத்துரை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தில் பலருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இது எதனால் ஏற்பட்ட தவறு என, விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., வந்திருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் எந்த தடையும் இருக்காது, என்றார்.