உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் பிசண்டா பகுதியை சேர்ந்த வெல்டிங் மிஷின் தொழிலாளி தினேஷ் திவாரியின் கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு போனது
இதுதொடர்பாக பிசண்டா போலீசில் தினேஷ் திவாரி புகார் அளித்தார். அதில், ‘40,000 ரூபாய் கடன் வாங்கி வெல்டிங் மிஷின் வாங்கி தொழில் செய்து வந்தேன்.
தற்போது அதனை திருடிச் சென்றுவிட்டனர். மேலும் கடையில் இருந்த கருவிகள் உள்ளிட்ட பிற பொருட்களை காணவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
போலீசார் இந்த திருட்டு குறித்து விசாரித்து வந்த நிலையில், தினேஷ் திவாரியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள காலி இடத்தில் மூட்டையில் கட்டப்பட்ட பை ஒன்று கிடந்தது.
அதில், தினேஷின் கடையில் திருடப்பட்ட பொருட்கள் இருந்தன. மேலும், அந்த பையில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், ‘இதில் தினேஷ் திவாரியின் பொருட்கள்.
உங்களது வறுமை நிலைமையைப் பற்றி வெளியே கேட்டு தெரிந்து கொண்டோம். அதனால், உங்களது பொருட்களை மீண்டும் திருப்பிக் கொண்டு வைத்துள்ளோம்.
இனிமேல் இதுபோன்று ஏழைகள் வீட்டில் திருடமாட்டோம்’ என்று எழுதி வைத்துள்ளனர்.
இதையறிந்த போலீஸ் அதிகாரிகள், அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
திருடர்கள் வைத்துவிட்டு சென்ற பையை, தினேஷ் திவாரியிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.